நாம் பயன்படுத்தும் காய்கறிகளில் மிக முக்கியமானது வெங்காயம். வெங்காயத்தில் பல வகைகள் இருந்தாலும் இந்த சாம்பார் வெங்காயத்திற்கு மவுசு அதிகம். பெரிய வெங்காயத்தை விட உடலுக்கு நன்மை தருவது சின்ன (சாம்பார்) வெங்காயம்.
சின்ன வெங்காயம் ஒரு குறுகிய கால பயிர். நடவு செய்ய ஏக்கருக்கு 750 கிலோ விதை வெங்காயம் தேவை. உடனே விளைந்த வெங்காயத்தை நடவு செய்ய கூடாது. குறைந்தது இரண்டு மாதம் ஆன காய்களை நடவு செய்வது சிறப்பு.
சின்ன வெங்காயத்திற்கு மூன்று பட்டங்கள் ஏற்றது தை, சித்திரை மற்றும் ஆனி அல்லது ஆடி ஆகிய மாதங்கள் நடவுக்கு ஏற்றது. அரை முதல் முக்கால் அடி பார்கள் அமைக்க வேண்டும்.
ஏக்கருக்கு 15 டன்கள் தொழுவுரம் இட்டு உழுது பின் பார் பிடிக்க வேண்டும். சணப்பை, சோளம் மற்றும் கம்பு இவைகளை கலந்து தூவி 60 நாட்கள் ஆன பின்னர் மடக்கி உழுது பின்னர் சின்ன வெங்காயம் நடுவது மிக சிறந்தது.
மண் தன்மைக்கு ஏற்ப தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பத்து முதல் பதினைந்து நாளில் முதல் களை. இரண்டாவது களை எடுக்கும் பொழுது மண் அனைப்பது மிகவும் முக்கியம். அப்பொழுதுதான் திரட்சியான காய்கள் கிடைக்கும்.
சாம்பார் வெங்காயத்தை அதிகம் தாக்கும் நோய் நுனி கருகல் நோய். தொடர்ந்து கற்பூரகரைசல் பத்து நாள் இடைவெளியில் தெளிப்பதால் இந்த நோயை முற்றிலும் தடுக்கலாம்.
சாம்பார் வெங்காயத்தை கிழங்கு வகை பயிர் ஆகையால் அதிக சத்துக்கள் தேவை. உயிர் உரங்களை கண்டிப்பாக இட வேண்டும். தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் பாசன நீரில் கலந்து விடுவது நன்று.
பல பயிர்களில் ஊடு பயிராக சாம்பார் வெங்காயம் நடவு செய்யலாம். ஏனெனில் இது குறுகிய கால பயிர். கிழங்கு வகை பயிர்களில் ஊடுபயிராக இடுவது தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இரண்டுக்கும் ஒரே விதமான சத்துக்கள் தேவை. அதனால் இரண்டின் வளர்ச்சியும் பாதிப்படையும்.
சின்ன(சாம்பார்)வெங்காயம் 85 நாளில் அறுவடை செய்ய தயாராகிவிடும். வெங்காய செடியின் தாள்கள் நன்கு முற்றி பழுத்து விடும். அப்பொழுது அறுவடைக்கு தயாராகிவிட்டது என்று அர்த்தம். அதிக பட்ச மகசூல் ஏக்கருக்கு 12 முதல் 15 டன்கள் கிடைக்கும்.
நல்ல விலை இல்லை என்றால் பட்டறை கட்டி விட்டு விலை வரும் போது விற்பனை செய்யலாம். பெரும்பாலும் சாம்பார் வெங்காயத்திற்கு சந்தையில் நிலையான விலை இருப்பதால் தைரியமாக பயிரிடலாம். விவசாயின் பொருளாதார நிலையை திடீரென உயர்த்த கூடிய பயிர்களில் இதுவும் ஒன்று.
chinna vengayam benefits in tamil
ReplyDelete