இப்பயிரைத் தாக்கும் நோய்களில் சில இலைகளில் தோன்றி சேதம் ஏற்படுத்தக் கூடியவை. சில வகை மண்வழிப் பரவும் தன்மை கொண்டவை. தற்போது இந்த வகையான மண் மூலம் பரவும் நோய்களைப் பற்றியும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளையும் அறிந்து கொள்வது நல்லது.
இலைப்புள்ளி நோய்:
- இந்தியாவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படும் எல்லா மாநிலங்களிலும் இந்த நோய் தோன்றுகிறது. மானாவாரி, இறவைப் பயிர்களையும் இந்த நோய் தாக்கக்கூடியது. இவை முன்பருவ இலைப்புள்ளி நோய், பின்பருவ இலைப்புள்ளி நோய் என இருவகைப்படும்.
- இலைப்புள்ளி நோய்கள் இரண்டு வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த நோய்க் காரணிகளால் ஏற்படுகின்றன. ஆனாலும் இரு நோய்களும் வேறுபட்ட அறிகுறிகளை ஒரே இலையில், ஒரேசமயத்தில் தோற்றுவிக்கக் கூடியவை.
- முதலில் தோன்றக் கூடிய முன்பருவ இலைப்புள்ளி நோய் பெரும்பாலும் விதைத்த 30 நாள்களில் தோன்றும். முதலில் இலைகளில் கருமைநிற வட்ட வடிவப் புள்ளிகள் சிறியதாகத் தோன்றும்.
- நாளடைவில் இவை விரிவடைந்து 3-8 மி.மீட்டர் விட்டம் வரையிலான புள்ளிகளாக மாறும். ஒரே இலையில் சில புள்ளிகளிலிருந்து, பல புள்ளிகள் வரை தோன்றும்.
- புள்ளிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து, ஒழுங்கற்ற வடிவமாக மாறும். கரும் பழுப்புநிற புள்ளிகளைச் சுற்றி பளிச்சென்ற மஞ்சள் நிறவளையத்தைக் கொண்டும் அடிப்பரப்பு இளம் பழுப்பு நிறமாகவும் தென்படும்.
- பின்பருவ இலைப்புள்ளி நோயின் அறிகுறி பயிர் விதைத்த சுமார் 40-50 நாள்களில் தோன்றும். இந்த நோய் காரணி தோற்றுவிக்கும் புள்ளிகள் சிறியதாகவும், சுமார் 1-6 மி. மீட்டர் வரை விட்டத்தைக் கொண்டும் காணப்படும். புள்ளிகளின் மேற்பரப்பு கரும்பழுப்பு அல்லது கருமை நிறத்திலும், அடிப்பரப்பு நல்ல கருமை நிறத்திலும் தென்படும். இப்புள்ளிகளைச் சுற்றி மஞ்சள் நிற வளைப்பகுதி காணப்படாது. புள்ளிகள் பெரும்பாலும் இலைகளில் காணப்பட்டாலும், இலைக்காம்பு, தண்டு, பூக்காம்பு போன்ற பாகங்களிலும் தென்படும்.
- பூக்கும்பருவத்திலிருந்து, அறுவடை வரையில் நோயின் தீவிரம் அதிகமாகக் காணப்படும். நோய் அதிகமாகத் தாக்கிய இலைகள் காய்ந்து உதிர்ந்துவிடும். பூக்காம்புகள் தாக்கப்படும் போது காய் பிடிப்பதும் பாதிக்கும்.
- மேலாண்மை நோயினால் தாக்கப்பட்டு நிலத்தில் உதிர்ந்து கிடக்கும் இலைகள், செடியின் பாகங்கள் போன்றவற்றை சேகரித்து எரித்துவிட வேண்டும். அறுவடைக்கு பின்னர் கொடிகளை நிலத்திலிருந்து முழுமையாக அப்புறப்படுத்துதல் அல்லது எரித்து விடுதல் வேண்டும்.
- நோய் தாக்காத பயிரிலிருந்து தரமான விதைகளைத் தேர்வு செய்து விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும்.
- பருவத்தில் விதைப்பு செய்தல் நல்லது. காணிப் பருவத்தில் காலம் தாழ்த்தி விதைப்பு செய்யும் பயிரில் அதிகம் நோய் தாக்குதல் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நிலத்தில் தொடர்ந்து நிலக்கடலை பயிரிடுவதைத் தவிர்த்து பயிர் சுழற்சி முறையை கையாள வேண்டும்.
- ஒரு கிலோ விதைக்கு, விதை நோத்தியாக டிரைக்கோடொமா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் ப்ளுரோசன்ஸ் 10 கிராம் என்ற அளவில் கலந்து விதைக்கலாம்.
- காற்று மூலம் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த நோயின் அறிகுறி தென்பட்டவுடன், ஏக்கருக்கு கார்பன்டாசிம் 200 கிராம் அல்லது குளோரோதலோனில் 400 கிராம் அல்லது மான்கோசெப் 400 கிராம் அல்லது டைபெனாகொனசோல் 200 மில்லி மருந்தை 200 லிட்டா நீரில் கலந்து தெளிக்க வேண்டும். நோயின் தீவிரத்தைப் பொறுத்து 15 நாள்கள் கழித்து மறுமுறையும் தெளிக்கலாம் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment