தென்னை, பாக்கு தோட்டங்களில் கோகோ பயிர் ஊடுபயிராக சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் கூடுதல் லாபம் பெறலாம்.
உகந்த இடம்:
- பணப்பயிராக விளங்கும் கோகோ சாகுபடி செய்ய 50 சதம் நிழல் உள்ள பகுதிகளே தேவை.
- களிமண், கடலோர மணல் பகுதிகளில் சாகுபடி செய்ய முடியாது.
தட்பவெப்ப நிலை:
- கோகோ பயிரானது வறட்சியைத் தாங்காது. எனவே, மண்ணில் அதிக அளவு ஈரத்தைப் பிடித்து வைக்கும் தன்மையுள்ள மண்ணாக இருக்க வேண்டும்.
- நடவு: 1.5-க்கு 1.5-க்கு 1.5 என்ற அளவில் குழிகளை எடுத்து நடவு செய்ய வேண்டும்.
- தென்னந்தோப்புகளில் நடும்போது இரண்டு தென்னை வரிசைகளில் மையப் பகுதியில் கன்றுகளை 10 அடி இடைவெளியில் குழியெடுத்து நடவு செய்ய வேண்டும்.
பயிர் பாதுகாப்பு:
- செந்நிற தண்டு துளைப்பாளர், காய் துளைப்பான் பூச்சிகளில் இருந்து பயிரைக் காக்க கந்தகம், எண்டோசல்பான் ஆகியவற்றை தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
- வேர்ப் புழுக்களைக் கட்டுப்படுத்த 2 கிராம் நனையும் கார்பரேட் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து மரத்தை சுற்றியுள்ள மண் பகுதியில் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.
கருங்காய் நோய்:
- ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கருங்காய் நோய் அதிகம் காணப்படும். நோய் பாதித்த காய்களின் மீது சாக்லெட் நிற புள்ளிகள் ஏற்படும். பின்னர், காய்கள் முழுவதும் படரும். இந்த நோயைக் கட்டுப்படுத்த மழைக்காலம் தொடங்கும் முன்னரும், பின்னரும் போர்டோ கலவையை தெளிக்க வேண்டும்.
நிழல்:
- கோகோ நிழலில் வளரக்கூடிய பயிர். ஆதலால் 50 முதல் 75 சதம் நிழல் விழும் பகுதியில்தான் நன்கு வளரும்.
அறுவடை:
- நவம்பரில் பூக்கள் தோன்ற ஆரம்பிக்கும். பூ பிஞ்சாகி முதிர்ந்த காயாக வளர 150 முதல் 170 நாள்கள் ஆகும்.
- நன்கு முதிர்ந்த கோகோ காய் உரித்த தேங்காய் அளவுக்கு இருக்கும்.
- முதிர்ந்த காயில் 30 முதல் 45 விதைகள் இருக்கும். காய் நன்கு முதிரும்போது, பச்சை நிறம் மஞ்சளாக மாறும். 100 காய்களிலிருந்து ஒரு கிலோ ஈர விதைகள் எடுக்கலாம்.
- 3 கிலோ ஈர விதைப்பருவிலிருந்து ஒரு கிலோ உலர்ந்த பருப்புகள் கிடைக்கும். ஒரு விதையின் எடை சராசரி ஒரு கிராம் இருக்க வேண்டும்.
மானியம்:
- கோகோ பயிரின் பரப்பு, உற்பத்தியை அதிகரிக்க தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் ஹெக்டேருக்கு ரூ.12,500 மானியமாக வழங்கப்படுகிறது.
- தமிழக அரசுடன் செய்துள்ள ஒப்பந்தப்படி வீரிய ஒட்டு செடிகளை கேட்பரி நிறுவனம் தேர்வு செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.
நிகர வருமானம்:
- கோகோ செடி நடவு செய்த மூன்றாவது ஆண்டில் ஒரு மரத்திலிருந்து சுமார் அரை கிலோ கோகோ விதையும், நான்கு வயதான மரத்திலிருந்து ஒன்றரை கிலோவும் 5 மற்றும் 6 வயதுடைய மரத்திலிருந்து 2.5 கிலோ கோகோ விதையும் கிடைக்கும்.
- ஓர் ஏக்கரில் ஊடுபயிராக சாகுபடி செய்துள்ள 200 கோகோ மரங்கள் மூலம் ஓராண்டில் 400 கிலோ உலர்ந்த பருப்பு கிடைக்கும். செலவு போக ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிகர லாபம் கிடைக்கும்.
எனவே, தென்னை, பாக்கு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஊடுபயிராக கோகோ சாகுபடி செய்யலாம்.
0 comments:
Post a Comment