ads

5/16/2018

சொட்டுநீர்ப்பாசன முறை-(DRIP IRRIGATION SYSTEM)

நாளுக்கு நாள் நீரின் தேவை அதிகரித்து வருகிறது. சிக்கனமாக நீரைப்பயன்படுத்தி, எதிர்கால தலைமுறைக்கு வளமான நீர்வளத்தை விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். 

அபரிவிதமாக நீரைப் பயன்படுத்துவதை விட, அளவாகப் பயன்படுத்தும் போது நிறைவான மகசூல் பெற முடியும்.

 நீர்ச்சிக்கனம், நிறை மகசூலுக்கு வழிவகுக்கும் சொட்டு நீர்ப்பாசன முறைகளை பயன் படுத்தலாம்.

சொட்டு நீர்ப்பாசனத்தின் பயன்கள்
இதன் மூலம் நீரும், சத்துக்களும் வேரில் கிடைக்கின்றன. நீரை சிக்கனப்படுத்தலாம்.

 பாசனத்திற்கு தனியே ஆள் விடத்தேவையில்லை. சத்துக்கள் நேரடியாக வேருக்குக் கிடைப்பதால் வீணாகாமல் பயிருக்கு கிடைக்கின்றன. 

நீர் வேரை நேரடியாகச்சென்றடைவதால், இடையே களைகள் முளைப்பது குறைகிறது. 30 முதல் 60 சதவீதம் வரை மகசூல் அதிகரிக்கும்.

 முன்னதாக பயிர் முதிர்ச்சிக்கு வருவதால், முன்கூட்டியே லாபம் கிடைக்கும். அடுத்த பயிர்ச்சாகுபடியை முன்னதாக மேற்கொள்ளலாம்.

விளைபொருட்களின் தரம், எடை, பொலிவு அதிகரிப்பதால் நல்ல விலை கிடைக்கும்.

சிறு, குறு விவசாயிகள்

சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க தமிழக அரசு 100 சதவீத மானியம் வழங்குகிறது. சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் மோட்டாருடன் கூடிய கிணறு, ஆழ்துளைக்கிணறு போதிய நீர் ஆதாரத்துடன் இருக்க வேண்டும்.

 பொதுவான நீர்ஆதாரம் கொண்ட சிறிய விவசாயிகள் 2, 3 பேர் சேர்ந்து இத்திட்டம் மூலம் பயன் பெறலாம். பயனாளிகள் சிறு, குறு விவசாயி சான்றிதழை தாசில்தாரிடம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

 தாசில்தார்/துணை தாசில்தார் மேலொப்பம் செய்த கணிணி சிட்டா, முந்தைய பயிர், சாகுபடி செய்யவுள்ள பயிரை குறிப்பிட்டு வி.ஏ.ஓ., வழங்கிய அடங்கல், வயல் வரைபட நகலை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும்.

 குத்தகை சாகுபடியானால் 10 ஆண்டுகளுக்கு நில உரிமையாளருடன் செய்து கொள்ளப்பட்ட, பதிவு செய்யப்பட்ட குத்தகை ஒப்பந்தத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

இதர விவசாயிகள்

இதர விவசாயிகளுக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க அரசு 75 சதவீத மானியம் வழங்குகிறது. 

இவர்கள் விண்ணப்பிக்கும் போது கணிணி சிட்டா, முன்பு சாகுபடி செய்த பயிர், தற்போது சாகுபடி செய்துள்ள பயிர் ஆகிய விபரங்கள் அடங்கிய வி.ஏ.ஓ., வழங்கிய அடங்கல், வயல் வரைபட நகல், 25 சதவீத பங்குத்தொகைக்குரிய வங்கி வரைவோலையை சமர்ப்பிக்க வேண்டும்.

வாழை, காய்கறிகள், மிளகாய், மலர்ப்பயிர்கள், பழ மரப்பயிர்கள் போன்ற தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்யும் சிறு, குறு, இதர விவசாயிகள் தோட்டக்கலைத்துறை அலுவலர்களை அணுகி சொட்டு நீர்ப்பாசனத்திட்டத்தைப் பயன்படுத்தி நிறை மகசூல் பெறலாம்.

0 comments:

Post a Comment