ads

5/16/2018

நெல்லிக்காய் சாகுபடி-(NELLIKAI SAGUPADI)


நெல்லிக்காய் சாகுபடி: ஹெக்டேருக்கு ரூ.1.25 லட்சம் லாபம் பெறலாம்;

தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் தகவல்

நெல்லிக்காய் சாகுபடியில் ஒரு ஹெக்டேரில், ஆண்டு ஒன்றுக்கு ரூ.1.25 லட்சம் லாபம் பெறலாம் என சிவகங்கை மாவட்ட தோட்டக்கலைத் துறையின் துணை இயக்குநர் பி.கல்யாணசுந்தரம் தெரிவித்தார்.

 அவர் மேலும் கூறியதாவது: மருத்துவக் குணம் வாய்ந்த பெருநெல்லி வறட்சியான நிலங்களில் பயிரிடப்படும் முக்கியமான பழப்பயிராகும்.

நெல்லிக்காயில் அதிக அளவு வைட்டமின் சி (700 மி.கி.) சத்து உள்ளது. மேலும், நெல்லிக்காய்கள் ஆயுர் வேத மருத்துவ பொருள்களான சயவனபிராஸ், திரிபலா சூர்ணம், பிரம்ம ரசாயனம், கூந்தல் தைலங்கள் தயாரிப்பில் ஒரு முக்கிய மூலப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

 நெல்லி பயிர் ஒரு வெப்ப மண்டல பயிராகும். மழை அளவு 630 - 800 மி.மீ., வடிகால் வசதியுள்ள உள்ள இடங்களில் வறட்சியை தாங்கி வளரும்.

 பனாரசி, என் ஏ 7, கிருஷ்ணா, சக்கயா, பி.எஸ்யஆர் ரகங்கள் தற்போது பயிர் செய்ய ஏற்ற ரகங்களாகும்.

விதை மூலம் உற்பத்தி செய்யும் நாற்றுகளைவிட மொட்டு கட்டு முறை அல்லது ஆப்பு ஒட்டு கட்டு முறையில் உற்பத்தி செய்யப்படும் ஒட்டுச் செடிகளை ஜூன், ஜூலை அல்லது செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 1 மீட்டர் நீள அகல, ஆழக்குழிகளில் 6 மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

 இளஞ்செடிகள் வேர்ப்பிடித்து வளரும் வரை 4 நாள்களுக்கு ஒரு முறையும், பின்னர் தேவைக்கு ஏற்ப 10 நாள்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சினாலே நன்கு வளர்ச்சி அடையும். நன்கு வளர்ந்த மரங்களுக்கு கோடைக் காலத்தில் மட்டும் நீர்ப்பாய்ச்சலாம்.

 மேலும், சொட்டு நீர்ப்பாசனம் மூலம் 40- 50 சதவீதம் வரை நீரைச் சேமிக்கலாம்.
 இளஞ்செடிகளுக்கு செடி ஒன்றுக்கு 20 கிலோ தொழு எருவும், காய்ப்பு மரங்களுக்கு 20 கிலோ தொழு உரமும், 1 கிலோ யூரியா, 1 கிலோ சூப்பர் பாஸ்பேட், 1 கிலோ பொட்டாஷ் உரங்களை இரு சம பாகங்களாக பிரித்து ஜூன், அக்டோபர் மாதங்களில் இட்டு நீர்ப்பாய்ச்ச வேண்டும்.

 நெல்லியின் தண்டுப் பகுதியைத் தாக்கும் தண்டு முடிச்சு பூச்சிகளை 2 மி மோனோகுரோட்டாபாஸ் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து 15 நாள்கள் இடைவெளியில் இருமுறை தெளித்து கட்டுப்படுத்தலாம்.

 ஜூன், ஜூலை மாதங்களில் இலைகளைத் தாக்கும் துரு நோயைக் கட்டுப்படுத்த 2 கிராம் மாங்கோசெப் மருந்தை ஒரு லிட்டர் கலந்து 15 நாள்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.

 காய்களில் தோன்றும் கரும்புள்ளிகள் குறைபாட்டை தடுக்க 6 கிராம் போராக்ஸ் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். ஒட்டுச் செடிகள் நட்ட 4 முதல் 5 ஆண்டுகளில் காய்க்க தொடங்கும்.

நன்கு பராமரிக்கப்பட்ட மரம் ஒன்றில் இருந்து ஆண்டுக்கு 100 கிலோ மகசூல் கிடைக்கும். தற்போது சந்தையில் ஒரு கிலோ நெல்லிக்காய் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 ஒரு ஹெக்டேரில் சாகுபடி செலவை தவிர்த்து ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் லாபம் கிடைக்கும் என்றார்.

 "ஜூன், ஜூலை மாதங்களில் இலைகளைத் தாக்கும் துரு நோயை கட்டுப்படுத்த 2 கிராம் மாங்கோசெப் மருந்தை ஒரு லிட்டர் கலந்து 15 நாள்கள் இடைவெளியில் இரு முறை தெளிக்க வேண்டும்.'

0 comments:

Post a Comment