ads

4/11/2018

தென்னையைத் தாக்கும் வெள்ளை ஈக்கள்-(Thennaiyai thakkum vellai eekal)


வெள்ளை ஈக்களின் (Aleurodicus) தாக்குதல் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பெருமளவு காணப்படுகிறது. இந்த வெள்ளை ஈக்கள் மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பூச்சி வகை, இந்த சிறிய வெள்ளை ஈ அதன் முட்டைகளை சுருள்சுருளான வடிவத்தில் இடுவதால் Rugose spirally whitefly என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்துள்ளார்கள், பெண் பூச்சிகளின் இறக்கைகள் மீது கருப்பு நிற வட்டம் இருப்பதை வைத்து இப்பூச்சியை அடையாளம் காணமுடியும்.

இந்த வெள்ளை ஈ தென்னையை தாக்குவதோடு மட்டுமல்லாமல், கொய்யா, வாழை போன்ற பயிர்களையும் தாக்குகிறது. இந்த தாக்குதல் கேரளா பாலக்காடு வழியாக பொள்ளாச்சியில் தொடங்கி தற்போது அருகருகே உள்ள மாவட்டங்களுக்கும் வந்துள்ளது. கடந்த ஆண்டு பொள்ளாச்சியில் காணப்பட்ட இந்த பூச்சி தற்போது உடுமலைபேட்டை பகுதியிலும் உள்ளது.

ஈரப்பதம் குறைவாக இருக்கும் போது இந்த பூச்சியில் இனப்பெருக்கம் அதிமாக இருக்கும், மேலும் வடகிழக்கு பருவமழையும் குறைவாக உள்ளதால் இந்த பூச்சி நன்றாக இனப்பெருக்கம் செய்துள்ளது. (மழை நீரினால் பூச்சிகள் அடித்துச் செல்லப்படுவதால் மழையின் போது பெருமளவு பூச்சி இனப்பெருக்கம் குறையும்)

இந்த வெள்ளை ஈ பொதுவாக ஒட்டுரக தென்னை மரங்களை மட்டும் அதிமாகத் தாக்கியுள்ளது. குட்டை, நெட்டை, மஞ்சள் குட்டை, ஆரஞ்சு குட்டை மற்றும் நெட்டை போன்ற எந்த ரகமும் தப்பவில்லை. நாட்டு ரகத் தென்னை மரங்களை இந்த வெள்ளை ஈக்களால் தாக்கமுடியவில்லை, நாட்டு ரக மரங்களில் எதிர்ப்பு சக்தி இதன் மூலம் நிரூபணமாகிறது, இந்த பூச்சிகளால் அதிக உயரத்திற்கு பரத்து செல்ல முடியாது என்பதால் 30 அடி உயரத்திற்கு மேற்பட்ட மரங்களை இந்த பூச்சியால் தாக்க முடிவதில்லை.

இந்த வெள்ளை ஈ, தென்னை கீற்றுகளின் அடியில் இருந்து கொண்டு சாறை உறிஞ்சுகின்றன, அந்த இலைகளில் இனிப்பு திரவத்தை (Honeydew) சுரந்து விடுகின்றன, இந்த இனிப்பு திரவத்தைத் நாடி எறும்புகள் வருகின்றன, தொடர்ந்து அந்த இனிப்பு திரவத்தின் மீது பூஞ்ஜைத் தொற்றும் ஏற்படுகிறது, இதனால் இலை கருப்பு வண்ணமடைந்து ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு, 20 சதவீதம் வரை மகசூலில் இழப்பை ஏற்படுத்துகிறது.

மரபு மாற்றப் பருத்தியில் காய்புழுவின் (Bollworm) தாக்குதல் எந்த அளவுக்கு பிரச்சினையாக உள்ளதோ அதே போன்று இந்த வெள்ளை ஈக்களின் தாக்குதலும் மாறிவிடுமோ என்று விவசாயிகள் மத்தியில் கவலை ஏற்படுத்தியுள்ளது.

*வேளாண்துறை வல்லுநர்களின் பரிந்துரை*

கடலைப்புண்ணாக்கு மற்றும் வேப்பங்கொட்டைத் தூள் போன்றவற்றை அடியுரமாக பயன்படுத்த வேண்டும். மஞ்சள் நிற ஒட்டும் தாள்களை பயன்படுத்துவதும், 1 சத ஸ்டார்ச் கரைசலை இலைகளின் மீது தெளிப்பதும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும், 1லிட்டர் தண்ணீருக்கு 1 கிராம் ஸ்டார்ச் தூள் கலந்தால் ஒரு சதவீத ஸ்டார்ச் கரைசல் தயாராகிவிடும். வேப்பங்கொட்டைக் கரைசலும் நல்ல பலனைத்தரும்

*வேப்பங்கொட்டை கரைசல்*

வேப்பங்கொட்டை 5 கிலோ, நாட்டுரகப் பூண்டு 500 கிராம், கோமியம் 10 லிட்டர்  போன்ற அளவுகளில் எடுத்துக்கொண்டு பூண்டு, வேப்பங்கொட்டை இரண்டையும் தனித்தனியே உரலில் நன்றாக இடித்து கொள்ள வேண்டும். (மிக்சியில் அரைத்தால் வெப்பத்தினால் வேப்பங்கொட்டையில் உள்ள ஆல்கலாய்டுகள் அழிந்து விடும்)

இந்த தூளை பருத்தி துணியில் கட்டி 10 லிட்டர் கோமியத்தில் ஊறவிட வேண்டும். வேப்பங்கொட்டையின் சாறு சிறிது சிறிதாக கரைந்து கோமியத்தில் கலக்கும் இரண்டு நாட்களுக்குப்பின் சாற்றை வடிகட்டி அதனுடன் நூறு கிராம் காதி சோப் கரைசலுடன் கலந்து கொள்ள வேண்டும். இந்த காதிசோப் கரைசல், வேப்பங்கொட்டைக் கரைசலை செடிகளின் மீது ஒட்டுவதற்கு உதவுகிறது.

1 லிட்டர் வேப்பங்கொட்டை கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயன்படுத்தலாம். மாலை மூன்று மணிக்கு மேல் தெளிப்பது நல்லது. காலை வெய்யில் நேரங்களில் கரைசலை அடிக்கும் போது கரைசலில் உள்ள ஆல்கலாய்டுகள் சூரிய ஒளியினால் அழிந்து விடுகிறது. எனவே வெய்யில் அடிக்கும் போது வேப்பங்கொட்டை அடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

வேப்பங்கொட்டை கரைசல் மாலையில் அடிக்கும் போது அதன் ஆல்காலாய்டுகள் இலையில் நன்கு ஒட்டிக்கொள்கிறது. இரண்டு நாள் முதல் நான்கு நாட்கள் வரை பயிரில் அந்த கசப்புத் தன்மை இருக்கும். கரைசல்களை அவ்வப்போது புதியதாக தயார் செய்து இரண்டு நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.

இது மிகச்சிறந்த பூச்சி விரட்டியாக செயல்படும், வேம்பின் வாசனை பூச்சிகளை விரட்டும், வேம்பின் கசப்பு சுவையால் பயிரின் இலையை பூச்சிகளால் சாப்பிட முடியாது, உண்ணும் பூச்சிகளின் வயிறு மந்தம் அடைகிறது, பூச்சிகள் மலட்டுத்தன்மையடைவதினால் இனப்பெருக்கம் கட்டுப்படுத்த படுகிறது, பெண் பூச்சிகள் முட்டையிடுவது தடுக்கப்படுகிறது.

*இரைவிழுங்கிகள் மூலம் கட்டுப்பாடு*
என்கேர்சியா குளவி (Encarsia gaudaloupae), பச்சைக் கண்ணாடிப்பூச்சி (Green lacewing) போன்ற நன்மை செய்யும் பூச்சிகள் இந்த மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்தக் கூடியவை, இதன் முட்டைகளை ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்திலும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்திலும் வாங்கிக்கொள்ள முடியும்.

1000 முட்டைகள் கொண்ட வெள்ளைக் கண்ணாடிப்பூச்சியின் முட்டை 300 ரூபாய்க்கும், என்கேர்சியா குளவி முட்டை ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் இலவசமாக கிடைக்கும்.

நன்மை செய்யும் குளவிகளை வரவழைப்பதற்கு தோட்டத்தில் ஆங்காங்கே மஞ்சள் வண்ணப்பூச்செடிகளை வளர்ப்பது உகந்தது. இதற்கு சாமந்தி, தட்டைபயிர் போன்றவற்றை தோட்டத்தில் பரவலாக ஆங்காங்கே நடவு செய்ய வேண்டும், வரப்போரங்களிலும் வேலியோரங்களிலும் வளர்ப்பது நன்மை செய்யும் பூச்சிகளை வரவழைக்கும் உத்தியாகும். நன்மை செய்யும் பூச்சிகள் ரசாயன பூச்சிகொல்லி தெளிப்பதினால் இறந்து விடக்கூடியவை அதனால் ரசாயன  பூச்சிக் கொல்லிகள் அடிப்பதைத் தவிர்ப்பதும் அவசியம்.

0 comments:

Post a Comment