வறட்சியை சமாளிக்க, வாழையில் ஊடுபயிராக செண்டுமல்லியை சாகுபடி செய்வதில், புன்செய்புளியம்பட்டி பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
புன்செய்புளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான தாசம்பாளையம், பனையம்பள்ளி, அண்ணாநகர், நால்ரோடு மற்றும் பவானிசாகர் பகுதிகளில், 3,000 ஏக்கரில் ஜி-9, நேந்திரன், கதிலி ரக வாழைகள் பயிரிடப்பட்டுள்ளன. மாறி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக விவசாயிகள் ஒரே பயிரை நம்பி இருக்காமல், பல பயிர்களை சாகுபடி செய்வது தற்போது விவசாயத்தில் அதிகரித்து வருகிறது.
கோடை துவங்கியுள்ள நிலையில், சுற்றுவட்டார விவசாயிகள், வறட்சியை சமாளிக்க, வாழையில் ஊடுபயிராக செண்டுமல்லி சாகுபடி செய்துள்ளனர். தனியாக உரம் போடுவதும், பாசனம் செய்வதும் தவிர்க்கப்படுகிறது. இதனால், மண்வளம் அதிகரிப்பதுடன், களைகளும் கட்டுப்படுத்தப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது:
குளம், குட்டை உள்ளிட்ட நீராதாரங்கள் முற்றிலும் வற்றியுள்ளன. தற்போது, நிலத்தடி நீர் உபயோகித்தும், சொட்டு நீர் பாசனம் மூலமும், விவசாயம் செய்து வருகிறோம்.
கோடை காலத்தில் இந்த நீரும் கிடைக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது. பாசனத்தில் உபரி நீரை பயனுள்ளதாக மாற்ற, ஊடுபயிர்களை சாகுபடி செய்யலாம்.
அந்த வகையில், வாழைக்கு நீர் தேவை அதிகம் என்பதால், ஊடுபயிராக செண்டுமல்லியை சாகுபடி செய்துள்ளோம்.
இதனால், வழக்கமாக வாழைக்கு விடும் பாசன நீரிலேயே, செண்டுமல்லிக்கும் நீர் பாய்ந்து விடும்.
வாழையின் அருகில், செண்டுமல்லி இருப்பதால், பூச்சிகளால் வாழைகளை நோய் தாக்காது.
வாழை சாகுபடி செய்வதால் ஏக்கர் ஒன்றுக்கு, ஆறு டன் முதல் எட்டு டன் வரை உற்பத்தி கிடைக்கிறது.
செண்டுமல்லி சாகுபடியில் கிடைக்கும், உபரி வருமானத்தில் ஆண்டுபயிரான வாழைக்கு உரமிடுதல், களை வெட்டுதல் உள்ளிட்ட செலவுகளை ஈடுகட்டமுடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 comments:
Post a Comment