ads

3/19/2018

முருங்கையில் பூக்களை அதிகப்படுத்த மண் மற்றும் நீர் மேலாணமை-(Murungaiul pookalai athigapadutha)



முருங்கை மரம் ஒரு வெப்ப மண்டலத்தை சார்ந்த பயிராதலால் வெப்பத்தை தாங்கி வளரக்கூடிய பண்புகள் உள்ளது. முருங்கை மரத்தின் தண்டுகளில் நீரை சேமிக்கக்கூடிய செல்கள் உள்ளன. மேலும் இவற்றில் இலைவழி நீராவியாதல் மிகவும் குறைவாக காணப்படுகிறது. அதிக குளிர் காலங்களில் இவற்றின் இலைகள் உதிர்ந்து விடுகின்றது. மேலும் பிஞ்சிலிருந்து உருவாகக் கூடிய காய்களில் பச்சையம் இருப்பதால் ஒளிச்சேர்க்கை நடைபெற்று தனக்கு தேவையான உணவினை தயாரித்துக் கொள்கின்றன. இதனால் வறட்சி காலங்களில் கூட மரத்தில் காய்கள் அதிகம் உதிர்ந்து விடுவதில்லை.

அதிகம் நீர் தேங்காத, வடிகால் வசதியுடைய செம்மண், மணல் கலந்த களி, செம்புரை மண், மணற்பாங்கான நிலங்களில் முருங்கை நன்கு செழித்து வளர்கிறது. முருங்கையின் வேர்கள் நீர்தேக்கத்தைத் தாங்கிக் கொள்வதில்லை. முருங்கை மரத்திற்கு 10-15 நாட்கள் இடைவெளியில் நீர்ப்பாய்ச்சலாம். மண்ணின் தன்மை, தட்பவெப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து நீர் பாய்ச்சுதலை அதிகப்படுத்தலாம்.

மண்ணில் ஈரப்பதத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குறைத்துக் கொண்டால் இலைகள் உற்பத்தி குறைந்து, பூமொட்டுக்கள் உருவாவது அதிகமாகிறது. பூ உற்பத்தியாவதற்கு நீர் பற்றாக்குறை அவசியம். ஆனால் பூக்கள் அதிகம் தோன்றியவுடன் நீர்ப்பாய்ச்சுதலை குறைத்தால் காய்கள் உற்பத்தி பாதிக்கப்படும், மகரந்தக்கருவி மகரந்தச்சேர்க்கை பாதிக்கப்படும். அதனால் மண்ணின் காரணிகளைப் பொறுத்து 7 முதல் 10 நாட்கள் இடைவெளியில் நீர்ப்பாய்ச்சுவதினால் காய்ப்பிடிக்கும் தன்மையினை அதிகப்படுத்தலாம். காய் முதிரும் பருவத்தில் மிதமான நீர் பாய்ச்சுதல் அவசியம். ஏனெனில் காய்களில் நீர் கோர்த்து அறுவடைக்கு பிந்திய நிலைப்புத் தன்மை பாதிக்கப்படும், காய்கள் முதிரும் பருவத்தில் நீர்ப்பாய்ச்சுதலை அறவே தவிர்க்க வேண்டும். இதனால் விதை உற்பத்தி அதிகரிக்கும்.

மிக அதிகமான வறட்சியின்போதும், வெப்பகாலங்களிலும் முருங்கை மரத்திற்கு பச்சை மிராக்கில், கயோலின், பி.எம்.ஏ. போன்ற நீராவியாதலுக்கு எதிரான வேதிப் பொருட்களை தெளிப்பதினால் பூ உதிர்வது தடுக்கப்படுகிறது.

முருங்கை மரத்தின் வேர் பகுதியினை எப்பொழுதுமே சுத்தமாக வைத்திருப்பது அவசியம். இதற்கு மண் அனைத்து அடிப்பகுதியை மேடு போன்று ஆக்குவதினால் தண்டு துளைப்பாண் மற்றும் கரையானிலிருந்து பாதுகாக்கலாம். மரத்தின் வேர்கள் மிகவும் மென்மையாக இருப்பதினால் அதிக காற்று அடித்தால் மரம் வேருடன் சாய்ந்து விடுகிறது மேலும் வேர்ப்பகுதியும் பாதிக்கப்படுகிறது. இதற்கு பாத்திகட்டி நீர்ப்பாய்ச்சுவதினாலோ அல்லது வாய்க்கால் வழி நீர் பாய்ச்சுவதினாலோ வேருடன் நீரின் நேரடித் தொடர்பினை தவிர்க்கலாம். இதனால் வேர் பாதிப்படைவது தவிர்க்கப்படுகிறது.

சொட்டு நீர் வழி பாய்ச்சும் பொழுது, சொட்டு நீர் குழாய்களை மரத்திலிருந்து 1 முதல் 1.5 அடி துாரத்தில் வைப்பதினால் வேருக்கு ஏற்படும் பாதிப்பினை குறைக்கலாம். உழவியல் முறைகளான கோடை உழவு, அகலப்படுக்கை அமைத்தல், சொட்டு நீர்ப்பாசனம், நிலப்போர்வை அமைத்தல், இயற்கை உரங்களை அளித்தல், கரிம அமிலங்களை அளிப்பதினால் முருங்கையில் மண், நீர் மேலாண்மையை திறம்படுத்தலாம். இதனால் முருங்கையில் அதிக பூக்கள் உருவாகி உற்பத்தி அதிகரிக்கிறது.

0 comments:

Post a Comment